Tuesday March 31st 2020

Archives

கோட்டா ஆட்சியில் தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை: அருட்தந்தை சக்திவேல்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இதுவரை எந்த தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 7 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களி்ல் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அருட்தந்தை ம. சக்திவேல் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இதுவரை அரசாங்கம் கூட உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை. அப்படியான நிலையில் ஊடகங்கள் சில பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் உள்ள 89 அரசியல் கைதிகளில் நான் அறிய எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஒரு அரசியல் கைதி மாத்திரம் விடுவிக்கப்பட்டார். அதனை தவிர இன்று எவரும் விடுவிக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

Leave a Reply