Saturday March 28th 2020

Archives

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அரசியல் தீர்வு அவசியம்; அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில சம்பந்தன் தெரிவிப்பு!

“தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய

வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியலமைப்பொன்றில் ஊடக அடைவதே எமது நோக்கமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபிளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நேற்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும்.

தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்படமாட்டோம்.

இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே ஸ்திரத்தன்மையும் இல்லாதபட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும்.

19வது திருத்தத்தை நீக்குதல் உள்ளிட்ட ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு நாம் சார்பாக செயற்பட முடியாது.” என்றுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இராசம்பந்தன், இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கியகாரணமாகும். இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

இந்த வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும். அது மாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின் வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.” என்றுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர், அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதிசெய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply