Saturday January 25th 2020

Archives

புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 30வது நினைவு நாள் இன்று!

எம்.ஜி.ஆர்க்கும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.

தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.

இப்போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் தலைவர்பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார்.

அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றார்.

அவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும், அவர் ஆட்சியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றார்.

ஆனால், தலைவர் பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி.ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது.

கால வெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக் கொள்ள நேர்ந்தது.

(ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்)

இந்த மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தனர்.

தலைவர் பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்கு இடம் கொடுத்ததால் சென்னை மையிலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது.

செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

பிரபாகரன், மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும்.

உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20 கட்சித் தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ.சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக் கூட்டத்திற்கு வந்திருந்தார்.

தலைவர் பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று தலைவர் பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார்.

அதன்படி இறுதி வரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் தலைவர் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.

தன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும்.

தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது.

சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான தலைவர் பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வர வேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச் சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் தலைவர் பிரபாகரன் முடிவு செய்து என்னிடம் கூறினார்.

பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் போய் விட்டார்” என்று பதில் அளித்தேன்.

ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களூரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை.

அவர்களது கோபம் என் மீது திரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக் கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.

“என்ன? உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார்.

நானும் சிரித்துக் கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன்.

பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுத்தியது.

1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமிழகம் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது.

அனைத்தையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். தலைவர் பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன.

தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டு கொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவு செய்தார்.

ஆனால் இதற்கு குறுக்கே ‘றோ’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது. இதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது.

இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும் படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும் படியும் மத்திய அரசால் ஆணையிடப்பட்டது.

இதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும் படி முதல்வர் எம்.ஜி.ஆரால் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் பெங்களூர் சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனாவையும், பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் ராஜீவ் திட்டமிட்டிருந்தார். அவருடைய சமரச திட்டம் இது தான்.

1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம்

2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்க வேண்டும்

3. தலைவர் பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி.

இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் ராஜீவ்.

அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் ராஜீவ்.

எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக் காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்திருந்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்து விட்டார். இறுதியாக பிரதமர் ராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து தலைவர் பிரபாகரனிடம் பேசும்படி கூறினார்.

எம்.ஜி.ஆரும் தலைவர் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஆறு மாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’ என எம்.ஜி.ஆர் கூறிய போது பிரபாகரன் கூறிய பதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது.

“கேவலம்! மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.

நாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக் கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை.

எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் ராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

இந்தியப் பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி தலைவர் பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன்.

உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.

ஆசைவார்த்தை காட்டி தலைவர் பிரபாகரனை பணிய வைக்க முடியாது என்பதை பிரதமர் ராஜீவிற்கு உணர்த்தினேன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம்.

திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களூரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம்.

திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களூர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டது.

ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.

முன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வர முடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் வரப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம்.

சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் ராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை தலைவர் பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.

தமிழ் நாட்டில் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார்.

சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பி விட்டு தானும் புறப்படத் தயாரானார்.

1987ஆம் ஆண்டு, ஜனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். தாயகம் செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப் போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு.

• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள் எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர் தான்.

• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கிய போது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• ஈழத் தமிழர்களுக்காக தான் கறுப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கறுப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• இந்தியாவின் இராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்ட போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு இராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி இராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

• ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஹோட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பதித்தார்கள்.

எம்.ஜி.ஆர். அப்போதும், தலைவர் பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் எம்.ஜி.ஆர். தான்!

• ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர். தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார்.

இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார்.

தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் – இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.

• அது மட்டுமல்ல புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள இராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் வேண்டுமென்றே அதை செய்யவில்லை.

புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, இராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள்.

அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார்.

“தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.

இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) – என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய இராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள்.

இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய இராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது.

இந்த நிலையில் இந்திய இராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.

• விடுதலைப் புலிகளும் இந்திய இராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

“சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது.

இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய இராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார்.

பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.

• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் அவரை தழுவிக் கொண்டது.

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது இரங்கல் செய்தியில் கூறினார்: “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.

என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” – என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை – வெளிப்படுத்திய கொள்கை உறுதியை – அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை.

ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும். ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

ஆம் அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை – அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.

Leave a Reply