Saturday January 18th 2020

Archives

இனப் படுகொலையின் முதல்பதிவா இறைவி படம்?

vanni_tamil_eelaதமிழ்த் திரைப்படங்களில், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான முதல் பதிவு ‘இறைவி’ தான் – என்று இயக்குநர் ராம் கூறியிருப்பதைப் படித்தவுடன் எழுந்த வியப்பில், அன்று மதியமே ‘இறைவி’ பார்த்தேன்.

தமிழின் அற்புதமான படைப்பாளிகளில் ஒருவரான ராமே அப்படிச் சொன்னபிறகு மேலதிகத் தாமதத்தை அனுமதித்துவிட முடியுமா?

‘மே 17’ என்கிற ‘பெயரில்’ ஒரு இயக்குநர் எடுத்திருக்கிற படம் வெளியாவதில் இருக்கும் முட்டுக்கட்டைதான் கதையின் அஸ்திவாரம். (‘இறைவி’யின் அஸ்திவாரம் வேறு!) படம் வெளியாகாத கவலையில், படத்தின் இயக்குநர் 24×7 டாஸ்மாக் வாசியாகிறார். அது கதையின் கொழுப்புமுனை. மற்றபடி, படத்தை வெளிக்கொண்டுவரத் தேவைப்படும் நான்கு லட்சத்துக்காக கோயில் சிலையைத் திருடத் திட்டமிடுவதில் தொடங்கி முழுக்க முழுக்கத் திருப்புமுனைகள்.

மே 17 – என்கிற அந்த நாள் எதையெதையெல்லாம் நினைவுபடுத்துகிறது என்பதை நானும் உணர்கிறேன். அதையெல்லாம் நினைந்து நெகிழ்ந்துபோனதாக நண்பர் ராம் சொல்லியிருப்பது போலவே, நானும் நெகிழ்ந்துபோனேன். என்றாலும், திரையில் ஓடுகிற இறைவியைப் பார்க்காமல் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு, மே 17ல் முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்ததை மட்டுமே நினைக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு மட்டும்தான் இந்த நெகிழ்ந்துபோதல் சாத்தியம்.

முள்ளிவாய்க்கால் நிலத்தின் ஒவ்வொரு மணல் துகளும் ரத்தத்தால் நனைந்த நாள், மே 17. விகடனில் வெளியான ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ – தொடரில் தோழர் சி.மகேந்திரன் எழுதியதைப்போல, பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்ட நாள், அந்த நாள். ஆயுதங்கள் ஏதுமின்றி வெள்ளைக் கொடியேந்திச் சென்ற ஆயிரக்கணக்கான மாவீரர்களிடம், அதிநவீனக் கொலைக்கருவிகள் மூலம் பௌத்த சிங்களப் பொறுக்கிகள் தங்களுடைய பேராண்மையை நிரூபித்த நாள்.

மகேந்திரனைப் பற்றிச் சொல்லும்போது ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். வீழ்வேனென்று நினைத்தாயோ – என்று பெயர்வைத்துவிட்டு, அந்தப் பெயரில் வேறு வியாபாரம் செய்துகொண்டிருக்கவில்லை அவர். அவரது எழுத்து, முள்ளிவாய்க்கால் ரத்தத்தில் காலூன்றி நின்றது. ஒவ்வொரு வார்த்தையும், முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் இந்த இனத்தை நிமிரவைப்பதாயிருந்தது.

கார்த்திக் சுப்புராஜைப் பொறுத்தவரை, இறைவி – என்பதுதான் அவரது படத்தின் பெயர். அதற்குள் வருகிற அருள் என்கிற கதாபாத்திரம் இயக்கியிருக்கும் படத்துக்கு ‘மே 17’ என்று பெயரிட்டிருப்பதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. அதுவே, நம்மையும் ராமையும், உசுப்பிவிடப் போதுமானதுதான்!

என்றாலும், ஒரு விஷயத்தை ஒளிவுமறைவில்லாமல் பேசியே ஆகவேண்டும். அருள் என்கிற இயக்குநர் ‘மே 17’ என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார் – என்று சொல்வதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பேயில்லை. காசு சம்பாதிப்பதற்காகவே இனப்படுகொலை பற்றிப் படமெடுப்பவர்கள் மத்தியில் அருள் மட்டும்தான் அதை ஒரு நல்ல படமாக எடுத்திருக்கிறார் – என்கிறதொனியில் ஒரு வசனம் வருகிறதே – அந்த வசனத்துக்கு உள்நோக்கம் இருக்கிறதா இல்லையா? கார்த்திக் சுப்புராஜுக்கே வெளிச்சம்.

கார்த்திக்கின் வசனம், யதார்த்தத்தோடு முரண்பட்டது. பணத்தையும் கூலியையும் இழக்கத் தயாராயிருப்பவர்களால்தான், இனப்படுகொலையைப் பற்றியெல்லாம் படமெடுக்க முடியும். நேரடி அனுபவத்துடன் இதைச் சொல்கிறேன். இப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் இல்லாமலேயே கார்த்திக் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதனால்தான், முள்ளிவாய்க்கால் பற்றியோ, ‘ஈழம்’ பற்றியோ, ‘இசைப்பிரியா’ பற்றியோ படமெடுக்காமல், வேறு சமாசாரங்களை வைத்துப் படமெடுக்கிறார். அது தவறுமில்லை. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் பிழைப்பது எப்படி சாத்தியம்?

‘இனப்படுகொலை பற்றிப் படமெடுத்தவர்கள் பணத்துக்காகத்தான் எடுத்தார்கள்’ என்று கார்த்திக் குற்றஞ்சாட்டுகிற அடிப்படையில் பார்த்தால், இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன என்பதை அவர் அறிந்திருக்கிறார். ராமுக்கோ, ‘இறைவி தான் முதல் பதிவு’! அவர் மாதிரியேதான் இவரும் யோசிக்க வேண்டுமா என்ன!

‘இனப்படுகொலையை வைத்துப் பிழைத்தவர்கள்’ என்கிற இவர்களது பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள்? ‘இனம்’ என்கிற பெயரில் புளுகுணி ஆட்டம் ஆடிய சந்தோஷ்சிவன் இருக்கிறாரா? ‘புலிப்பார்வை’ மூலம் வரலாற்றையே திரிக்க முயன்ற பிரவீண்காந்த் இருக்கிறாரா?

என்னை விடுங்கள்… நான் ஊரறிந்த பிராமணன். பூணூல் தேவையில்லை. தமிழில் ‘ராவணதேசம்’ என்கிற அற்புதமான படைப்பை வழங்கிய அஜய் என்கிற காக்கிநாடா கலைஞனைத் தெரியுமா இவர்களுக்கு? தன்னுடைய கடுமையான உழைப்பால், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற பெயரில் இசைப்பிரியாவின் கதையைக் கண்ணீர்ப்பூக்களாலேயே கோத்திருக்கிறானே, பெங்களூரைச் சேர்ந்த கணேசன். அந்த இயக்குநரை அறிவார்களா இவர்கள்?

இனப்படுகொலைக்கு அஞ்சி வெளியேறியவர்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியாவுக்குக் கடற்பயணம் போகத் துணிவது குறித்து கனிவுடன் பேசிய ராஜ்கிரணின் ‘சிவப்பு’ பட இயக்குநர் கிருஷ்ணாவை எப்படி இவர்களுக்குத் தெரியாதிருக்கும்?

பெயர்களை மட்டுமே பயன்படுத்தி, உணர்விருப்பவர்களைப் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் – என்று யாரையாவது இவர்கள் விமர்சிக்கிறார்களா? மே 17, கேப்டன் பிரபாகரன் – என்றெல்லாம் பெயர் வைப்பதைத்தாண்டி ஒரு தப்படிகூட எடுத்துவைக்கத் துணியாத நண்பர்கள், உண்மையோடும் உணர்வோடும் படமெடுப்பவர்களைப் பார்த்து விரலை நீட்டுவது என்ன நியாயம்?

இனப்படுகொலையை அம்பலப்படுத்தி – இசைப்பிரியா என்கிற எம் இனத்தின் திருமகளுக்கு நீதி கேட்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’, தணிக்கைத் தடைகளையெல்லாம் மீறி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிகழ்வில் திரையிடப்படுகிறதே, எப்படி? அதற்கான தகுதி அதற்கு இருக்கிறது என்பது மட்டும்தானே அதற்குக் காரணம்! மே 17 – என்று பெயர் வைப்பது மட்டுமே அப்படியொரு தகுதியைப் பெற்றுத்தந்துவிடுமா?

மே 17 – என்கிற பெயரைத்தவிர, வேறு என்ன இருக்கிறது இறைவியில்? அப்படியொரு பெயரில் படமெடுக்கிற இயக்குநரை மொடாக்குடியராகக் காட்டுவது, கயமையிலும் கயமையல்லவா! இது, ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்கிற ஓர்மத்துக்கு எதிர்ப்பதமா இல்லையா?

ஏழு ஆண்டுகளாகின்றன, இனப்படுகொலை நடந்து! இந்தியாவின் துரோகத்தால், இன்னும் கூட நீதி இழுத்தடிக்கப்படுகிறது. பனிப் பொழிவு கடுமையாய் இருக்கிற நாட்களிலும், குளிர்க் கோட்டுடன் வீதியில் நின்று இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் – எமது புலம்பெயர் இளைஞர்கள். மது குடிப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கும் மேலைநாடுகளில் வாழ்கிற அவர்கள், குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறப் படுத்துவிடவில்லை.

விடுதலைப் புலிகள் என்கிற விடுதலை இயக்கமும், பிரபாகரன் என்கிற உன்னதத் தலைவனும் ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பாலிருந்து இந்த ஓர்மத்தைத்தான் விதைத்திருக்கிறார்கள், எமது இளைஞர்களுக்குள்! இறைவியை இயக்கியிருக்கும், இளம் சாதனையாளரான கார்த்திக் போன்றவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோயில் சிலையைக் கொள்ளையடித்தாவது ‘மே 17’ என்கிற பெயரிலான படத்தைக் கொண்டுவர முயற்சிப்பது, ஈழ ஆதரவுத் தளத்தைக் களவாணிகளின் களமாகக் காட்ட முயல்கிற அயோக்கியத்தனம். ஈழத் தாயகத்தில் புத்தர்களை நிறுவுவதற்காக, எமது இறைவன் இறைவி சிலைகளை எல்லாம் கொள்ளையடிக்கிறார்களே…. அந்தக் கொடியவர்களின் செயலுக்கு வெள்ளையடிக்கிற வேலை. இதையெல்லாம் பேசாதிருந்துவிடக் கூடாது என்பதாலேயே, எனக்கிருக்கிற உரிமையோடும் தகுதியோடும் பேசுகிறேன்.

கார்த்திக் சுப்புராஜின் வசனம் புதிதுமல்ல. தமிழ் சினிமாவின் அதியற்புதமான படைப்பாளி ஒருவர், ‘ஈழத்தைப் பற்றிப் படமெடுப்பவர்கள் பணத்துக்காகத்தான் எடுக்கிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தனது படைப்புகளால் மரணத்துக்குப் பின்னும் உயிர்த்திருக்கும் அந்தக் கலைஞனைக் காலமெல்லாம் காதலித்தவன் நான். என்றாலும், தன்னுடைய இயலாமையை அல்லது கோழைத்தனத்தை மறைப்பதற்காக மற்றவர்கள் முகத்தில் கரிபூச அந்தக் கலைஞன் முயன்றபோது கடுமையாக எதிர்த்தேன். இப்போது, அதே குரல்தான், கார்த்திக்கின் குரலாக ஒலிக்கிறது. எப்படி இதை அனுமதிக்க முடியும்?

நல்ல மனங்களையும், நாகரிக மனிதர்களையும் காட்டும் feel good திரைப்படங்கள் மிக மிகத் தனித்த ரகம். விக்கிரமன் போன்றவர்களால் தமிழ் சினிமாவின் வர்த்தகத்தனத்தையும் மீறி அதையெல்லாம் சித்தரிக்க முடிந்தது. மனிதனின் அழுக்குப் பக்கங்களை மட்டுமே காட்டிப் படமெடுப்பது அடுத்த ரகம். இதில்தான் கூடுதலாகக் காசு பார்க்க முடியும். இறைவி இதில் எந்த ரகம் என்பதை ராம் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.

இவ்வளவு உணர்வையும் மீறி, இறைவியைப் பார்த்துவிட்டு வெளியே வருகிறபோது, ஒரு இறைவியாகவே எனக்குள் வியாபித்திருந்தாள் – பொன்னி. அந்தக் கதாபாத்திரத்தை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு அழுத்தமாகச் சித்தரித்திருக்கும் அஞ்சலி, தமிழ் சினிமாவில் சர்வநிச்சயமாக சாவித்திரி ரேஞ்சுக்குப் போய்விட முடியும். விஜய் சேதுபதியை ஊடுருவிப் பார்க்கும் அஞ்சலியின் ஒரே ஒரு பார்வை, ஓராயிரம் பொருள்களைப் பேசுகிறது. திரையரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஊடுருவுகிறது அந்தப் பார்வை.

உடல்மொழி பேசும் நடிகைகள் அதிகரித்துவருகிற திரையுலகில், விழிவழி பேசும் அஞ்சலி உண்மையிலேயே குறிஞ்சிமலர். அந்த மலரை முதல்முதலாக அடையாளம் கண்டவர், ராம். கற்றது தமிழ் மூலம் ராமிடம் அஞ்சலி கற்றது கடலளவு என்பதை இறைவி நிரூபிக்கிறது. அஞ்சலி மாதிரி நடிக்கத் தெரிந்த கலைஞர்கள், தங்களது திறமை திசைதிருப்பப்படாமல் பார்த்துக் கொள்வது, அவருக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் நல்லது.

அதே சமயம், கார்த்திக் சுப்புராஜ் போன்ற திறமைமிக்க இயக்குநர்கள், வரலாற்றுப் பெயர்களையும் நாட்களையும் முதுகுசொரியப் பயன்படுத்திக் கொள்வது, அந்த வரலாற்றைக் கொச்சைப்படுத்திவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது, கார்த்திக்குக்கும் நல்லது, தமிழினத்துக்கும் நல்லது!.

Leave a Reply