Sunday February 23rd 2020

Archives

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படம் எம்.ஜி.ஆரை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. பின்னர் அரசியல் களத்திலும் கோலோச்ச தொடங்கினார். 1977முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடமையிலிருந்தார். மூன்று தடவை தொடர்ச்சியாக இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சானார்.

முதன்முறையாக திரைப்பட நடிகர் ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக பதவியேற்ற பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எனும் பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இவரது கலைச்சேவை, பொதுச்சேவைக்கு கிடைத்த செல்வாக்கு, கௌரவம் என்பன அத்தேர்தலை அதிமுக வெற்றிகரமாக எதிர்நோக்க பெரிதும் உதவியது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சியில் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரை கடவுள் போன்றே போற்றினார்கள். தமிழ் மொழிக்கு என தனியே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென 1921ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நடைமுறை சாத்தியமாக்கினார் எம்.ஜி.ஆர்.

1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முயற்சியில் தான் தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகளில், பாரத் விருது, பாரத ரத்னா விருது, பத்மசிறீ விருது என்பன குறிப்பிடத்தக்கன. இதில் பத்மசிறீ விருதை அவர் ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யுத்த தேவைகளுக்காக நிதியுதவி செய்த முதலாவது அரசியல் தலைவர் எனும் பெருமையும் எம்.ஜி.ஆரை சாரும். 1962ம் ஆண்டு, சீனாவுடனான யுத்தத்தின் போது ரூ.75,000 யுத்த நிதியுதவியாக இந்திய இராணுவத்திற்கு கையளித்தார். அதோடு இலங்கையிலிருந்து தமிழீழம் தனி நாடாக சுதந்திரம் பெறவேண்டுமென வெளிப்படையாகயே வி.புலிகளுக்கு நிதியுதவி செய்தவ எம்.ஜி.ஆர் ஆவார்.

அதோடு தீ, வெள்ளம், சூறாவாளி போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கிய பிரதேசங்களின் மீள் நிவாரண பணிகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் அதிக நிதியுதவி செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதே, 1987ம் ஆண்டு டிச.24ம் திகதி எம்.ஜி.ஆர் மறைவை எய்தினார். எம்.ஜி.ஆர் மீது கொண்டிருக்கும் தனிப் பற்றுதல் காரணமாக மட்டுமே, அதிமுகவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.

Leave a Reply