Sunday May 31st 2020

Archives

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!
கனடாவிலிருந்து பவித்திரா-

நேரிசை வெண்பா

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!
நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் – உன்னத
தெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்
செய்யதிரு சேயோன் செயல்!

பருத்தித் துறையெனும் பாங்கான ஊரில்
மருவுதமிழ் மேவு மனையாம் – தருமம்
இயற்றுநல் மெத்தைவீட் டில்லறம் தன்னில்
வியத்தகு சேயானாய் வீறு!

வெற்றித் திருநகராம் வேலவன் வாழ்விடமாம்
கற்றவர் சார்பு கவின்பொழில் – நற்றுயர்
வேதம் ஒலித்திடு வீதி; நிறைமனைப்
பாதம் பதித்தாய் பயன்!

நாற்குணமும் நன்றே நடைபயிலச் செல்வந்த
மேற்குடியிற் றோன்றிடு மெல்லியாய் – சாற்று
கரும்பென இன்புற்ற காரிகையாம் நின்னை
விரும்பியே கைப்பிடித்தார் வேல்!

இல்லற வாழ்வெனும் இன்புறு சோலையில்
நல்லறம் காத்து நயப்புடன் – சொல்லற
நீறுடன் குங்குமம் நெற்றியில் நீக்கமற
வீறுடன் ஈன்றாய்நல் வீரன்!

தனையனைத் தேடியே சர்க்காரும் தோன்றத்
தனியளாய்ப் போராட்டம் செய்தீர் – நனிவுயர்
செல்வனும் ஞானத்தாற் கண்ணுற்றான் விட்டகன்றான்
பல்லாண்டு நீக்கினான் பற்று1

தமிழினத்தின் தாயே! தவத்தின் பயனே!
கமழும் புகழ்கரி காலன் – அமிழ்தன்
முருகனைத் தாங்கிய மூலம்தான் நீயே
அருமகனைத் தேடுகிறோம் ஆய்ந்து!

தற்கொடை செய்தாரெம் சந்தன மேனியர்
அற்புதமே ஆற்றினார் அவ்வண்ணம் – பொற்றுயர்
தாயே விலையிலாத் தானமாய் நின்னுயிர்
ஈய்ந்தாய் உணர்வார் எவர்?

போராட்டம் செய்தோமே புன்மைகள் நீங்கிட
பாராளு முன்றிலிலும் பேசினோமே – சீராளத்
தாயுந்தன் வாழ்விற்காய்த் தட்டித்தான் கேட்டோமா?
வாயுரைப்பில் வல்லவரே வார்!

கொடியவரின் வஞ்சனையாற் கொண்டவனை நீங்கிக்
கடிதெனவே நோயுற்ற காலை – மடிதனில்
தாங்கிடப் பிள்ளையின்றித் தாகத்தில் வெந்தீரே
ஏங்கினார் சேய்களும் இங்கு!

அம்மா! நீயின்றி ஆதவன்தான் ஈங்கேது?
இம்மா நிலத்தின் இணையிலாச் – செம்மலவன்
தோற்றமே ஈழத்தின் தொன்மை வரலாறு
ஆற்றலும் ஆன்றோன் அவன்!

கொற்றவனைப் பெற்றவளே! கோப்பெருந் தேவியே!
நற்றுணையாய் நிற்பாய் நமதினத்தைச் – சுற்றியுள்ள
வஞ்சம் அகற்றும் வலிமை தருவாயே
அஞ்சுதல் இல்லா அணங்கு!

(தேசியத் தலைவராம் எங்கள் கரிகாலனை எம்மினத்திற்காய் ஈன்று புறம் தந்த அன்னை பார்வதி அம்மாளின் முப்பத்தோராவது நினைவு நாளையொட்டி வெண்பாவினாலான இப்பாடல் வெளியிடப்படுகிறது)

Leave a Reply