Sunday May 31st 2020

Archives

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!: கவிதை

அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!

என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?

அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..

குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..

என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?

தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..

கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..

இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..

உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !

மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!

அண்ணன் 03.01.2011

Leave a Reply