Monday May 21st 2018

Archives

தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட தலையீடுகளையும் பங்களிப்பையும் நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், “அத்தலையீடுகளின் விளைவாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போதிலும், அது ஒரு தீர்வல்ல” என்றுள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டிருந்த போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்த போது, அவ்வாணைக்குழுவின் பிரேரணையில் அடிப்படையில் கடமைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், சுயாட்சியின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கான தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.

இந்தியாவில், 1935ஆம் ஆண்டில், மாகாணங்கள் உருவாக்கப்பட்டு, மாகாணங்களுக்குச் சுய அதிகாரம் வழங்கப்பட்டன. சுதந்திரத்தின் பின்னர் அந்நாட்டின் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது, சுயாட்சியின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தை இலங்கை இழந்து விட்டது.

நாங்கள் ஆரம்பத்தில், டொனமூர் ஆணைக்குழுவின் முன்னால், பூரண சுயாட்சி கேட்டோம். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில், சமஷ்டி அடிப்படையில் ஆட்சி பகிரப்பட வேண்டுமென நாம் கோரவில்லை. பூரண சுவராஜ் (சுயாட்சி) கேட்டோம். கண்டியச் சிங்களத் தலைவர்கள், தங்களுக்குச் சமஷ்டி கேட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.

டொனமூர் ஆணைக்குழு வந்த போது, நாங்கள் 50-50 என்று கேட்டோம். அது தவறென்று கூறவில்லை. ஆனால் எந்தளவுக்கு யதார்த்தமென்பது கேள்விக்குரியது. நாடு சுதந்திரமடைவதற்கு முன்பாக இந்நிலைமை காணப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின்னர், பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாக இருந்தது. சாதாரண மாவட்ட சபைகளை உருவாக்குவதற்குக் கூடக் கடினமாக இருந்தது.

ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வைப் பெறுவதற்கு, யதார்த்தமாகச் செயற்பட வேண்டியுள்ளது. அனைத்து மக்களும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பாமர சிங்கள மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் நியாயமான, நிதானமான ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்படுத்துவதற்கு மறுப்பார்கள் என நினைக்கவில்லை. அவர்களுக்கு உண்மையை விளக்கி, அவர்களுடைய ஒத்துழைப்புடனும் தீர்வை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஒரே வழி.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கை நியாயமானதொரு கோரிக்கை; அது அங்கிகரிக்கப்பட வேண்டிய ஒரு கோரிக்கை; அங்கிகாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை என்ற நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் இருக்கிறது. அதை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

Leave a Reply