Wednesday April 25th 2018

Archives

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும்; அரசாங்கம் நம்பிக்கை!

அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டதற்கும் ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மத்திய கிழக்கு விஜயம் தொடர்பில் பண்டாரநாயக்க காலம் முதல் அரசாங்கம் அணிசேராக்கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது.

இதனடிப்படையிலேயே சமகால நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலம்; தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு இலங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

128 நாடுகளில் 120 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்தன. இலங்கையும் இவ்வாறே செயற்பட்டது. எனவே மத்திய கிழக்கு தொடர்பாக வழமையான அணிசேரா கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமும் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்கா இந்த ஜி.எஸ்.பி. சலுகையை 9 நாடுகளுக்கு வழங்கிவருகின்றன. இதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒன்றல்ல. இடைக்கிடையே அமெரிக்காவினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. இருப்பினும் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புகின்றோம்.” என்றுள்ளனர்.

Leave a Reply