Tuesday July 16th 2019

இணைப்புக்கள்

Archives

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இளம் இரத்தம் பாய்ச்சுவதையே வற்புறுத்துகிறார் ஸ்ரீகாந்தா

ஸ்ரீகாந்தா“ஏஸியன் ரிபி யூன்” இணையத்தளத்திற்குத் தாம் வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இளரத்தம் பாய்ச்சுவது பற்றியே..

தாம் முக்கியமாகக் குறிப்பிட்டார் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

“தமிழ்க் கூட்டமைப்பின் வயது முதிர்ந்த தலைகள் நாடாளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கவேண்டும்! ஸ்ரீகாந்தா கூறுகிறார்; பொன்சேகாவை ஆதரிப்பது குறித்து இன்னமும் முடி வில்லையாம்!!” என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் “உதயனில்” பிரசுரமான செய்தி குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே அவர் இப்படித் தெரிவித்தார்.

இவ்விடயத்தையொட்டி அந்த இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்த கருத்துகள், நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்காக இங்கு அப்படியே மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. அவர் கூறியவை வருமாறு:
ஒரு கட்சி அல்லது அரசியல் அமைப்பொன்று தேர்தலின்போது புதிய முகங்களைக் கொண்டு வருவது, அறிமுகப்படுத்துவது என்பது இயல்பான விடயம். இது உங்களுக்குத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரை அதற்குப் புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டிய அவசர தேவையுள்ளது. இளம் இரத்தத்தை நான் குறிப்பிடுகிறேன். 1983 முதல் காணப்பட்ட இராணுவ மோதல் காரணமாகத் தமிழர்களின் தொழில்சார் நிபுணர்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்குத் தயக்கம் காட்டி வந்தனர், விலகி நின்றனர். தற்போது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகின்றது. அண்மையில் நடந்துமுடிந்த யாழ்ப்பாண உள்ளூராட்சித் தேர்தலின்போது அரசியலுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இளமையான துடிப்புள்ள இரண்டு, மூன்று வேட்பாளர்களை எங்களால் நிறுத்த முடிந்தது. அவர்களில் சிலர் கல்வித்துறையிலும் தகைமை பெற்றவர்களாக இருந்தனர்.
இது நல்ல அறிகுறி. இதனைத் தொடர்ந்து முன்னெடுப்போம். மேலும் இளையவர்களை நாம் கொண்டுவர வேண்டும்.

1952 இல் தமிழரசுக் கட்சி, முதற் தடவையாகப் பொதுத்தேர்தலை எதிர்கொண்டவேளை, அதன் தலைவராகவிருந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்வ நாயகம் அப்போது அமிர்தலிங்கத்தை நிறுத்தினார். அவருக்கு அப்போது ஆக 24 வயதுதான். மேலும் அவர் சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையை அப்போதுதான் எழுதி முடித்திருந்தார். அத்தேர்தலில் சொற்ப வித்தியாசத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்திடம் தோற்று மூன்றாவதாக வந்தார். வீரசிங்கம் அத்தேர்தலில் முதல் தடவையாக வென்றார்.

தந்தை செல்வநாயகம் 1956 இல் ஒருவரல்ல, நான்கு இளைஞர்களை அந்தச் சமயத்தில் களமிறக்கினார். அமிர்தலிங்கம் ஒருவர், மற்றவர் எஸ்.இராஜதுரை. அவருக்கு அப்போது வயது 28. வி.என்.நவரத்தினத்துக்கு வயது 26. கே.பி.துரைரத்தினம் வயது 25. பொத்துவில் தொகுதியில் வெற்றியீட்டிய முஸ்தபா தமது 30 வயதுகளில் இருந்தார்.

இந்த நிலைமை அண்மைக்காலங்களில் வேகமாக மாறி வந்துள்ளது. கடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்களைப் பொறுத்தவரை அவர்களில் ஒரு சிலரைத் தவிர, அநேகமானவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். 40, 50, 60களின் நடுப்பகுதியில் உள்ளவர்கள்.
ஆகவே, இது மாறவேண்டும். அனுபவமிக்க அரசியல்வாதிகள், நாடாளுமன்றத் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறவேண்டும் என்பதைக் கூற விரும்புகிறேன். எமக்கு அனுபவத்துடன் இளமைத் துடிப்பும் தேவை.

எனவே, வயது மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பொறுத்தவரை சரியான கலவையாக அது அமைய வேண்டும். இம்முறையாவது இளைஞர்கள் குறித்து நாம் நோக்க வேண்டும். 30 வயதைத் தாண்டியுள்ள கஜேந்திரகுமார் 2001 இல் முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட வேளை, அவருக்கு 26 வயதே. நான் கஜேந்திரகுமார் குறித்துக் குறிப்பிடுகிறேன்.

கேள்வி: பொன்னம்பலத்தின் மகன்?

பதில்: ஆம். குமார்பொன்னம் பலத்தின் மகன். ஜி.ஜியின் பேரன். எங்களுக்கு அவரைப் போல் வயதில் முப்பதுகளில் உள்ள இளைஞர், யுவதிகள் தேவை. இருபதுகளின் நடுப்பகுதியில் அல்லது இருபதுகளின் பிற்பகுதியில் உள்ள ஓரிரு வரும் குறைந்தபட்சம் முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் உள்ள சிலரும் எங்களுக்கு வேட்பாளர்களாகத் தேவை என்றார் அவர்.

Leave a Reply