இலங்கை முன்னாள் தலைமை ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை ரகசியமாகவும், விரைவாகவும் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது, அந்நாட்டு ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. போர் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிபர் ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பொன்சேகா, முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், 18 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பொன்சேகா தோல்வி அடைந்தார்.
அதிபர் தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்ததும், ராஜபக்சேவை கொலை செய்ய சதி தீட்டியதாகவும், ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பொன்சேகாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ராணுவ மூத்த அதிகாரிளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து பொன்சேகா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பொன்சேகாவின் அலுவலகத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர், அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த செய்தியாளர் சேனக செல்வாவும் கைது செய்யப்பட்டார்.
பொன்சோ ராணுவ தலைமை தளபதி பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ராணுவ நீதிமன்றத்தில் விரைவாகவும், ரகசியமாகவும் விசாரித்து அதிகபட்ச தண்டனை வழக்க ராஜபச்சே உத்தரவிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்சேகா கைதால் கொழும்புவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.





