Friday December 6th 2019

Archives

பொன்சேகா ஏன் அமெரிக்காவின் விசாரணையை புறம்தள்ளினார்?

Sarath Fonsegaஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தகவல் வெளியானதுமே இலங்கை அரசு பதறிப் போனது. விசாரணையில் இருந்து அவரை மீட்டு, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு, பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது.

அது ஜெனரல் சரத் பொன்சேகாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சியா அல்லது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைப் பாதுகாப்பதற்கான முயற்சியா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

எவ்வாறாயினும் இலங்கை அரசு அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைக்கு முகம் கொடுக்காமலே அவரை அவசர அவசரமாக கொழும்புக்கு அழைத்து வந்து விட்டது.

இலங்கை அரசு இதைப் பெரிய சாதனையாகக் கூறிக் கொண்டிருப்பினும் சர்வதேச அளவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியம் ஒன்றை அளிக்க வருமாறு கடந்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம்.

ஒக்லஹோமாவில் கடந்த 4 ம் திகதி மாலை 4.30 மணியளவில் விசாரணைக்கு சமுகமளிக்கும்படி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி ஜெனரல் சரத் பொன்சேகா வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்தார். இந்தத் தகவல் கிடைத்ததுமே அரசாங்கம் உண்மையில் திகைத்துப் போனது.

ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் கிறீன் கார்ட் வதிவிட உரிமையைப் பெற்றுக் கொண்டவர். ஆனால் அவர் அமெரிக்கப் பிரஜை அல்ல. அங்கு அவர் நிரந்தரமாக வசிக்காததால் தான் இந்த விசாரணை என்று கூறப்பட்டாலும் இந்த விசாரணையின் பின்னணி குறித்த சந்தேகங்கள் அரசுக்கு எழுந்தது.

வன்னியில் நடந்த போர் குறித்த அறிக்கை ஒன்றை அண்மையில் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

போர்க்குற்ற மீறல்கள் பட்டியலிடப்பட்டிருந்த இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீதும், புலிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நகர்வுகளை இலங்கை அரசு அச்சத்துடன் பார்த்ததில் அர்த்தம் இருந்தது.

இதனால் தான் அரசு அவசர அவசரமாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான சட்ட ஆலோசகர்களை நியமித்தது.

அதேவேளை, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை தீர்த்துக் கொள்வதற்கு உதவுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகார பிரதிச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, அமெரிக்க வதிவிட உமையைப் பெற்ற ஒருவருக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் இருந்தது. அமெரிக்கப் பிரஜைகளும், வதிவிட உரிமை (கிறீன்கார்ட்) பெற்றுக் கொண்டவர்களும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதால் விசாரணை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குச் சாதகமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

அம்பலாங்கொடையில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக் கூறப்பட்ட கருத்துகளே அவருக்கு எதிராகத் திரும்பக் கூடிய நிலை இருந்தது.

புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுவச் சட்டங்களை மீறிச் செயற்பட வேண்டியிருந்ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா அம்பலாங்கொடையில் நிகழ்த்திய உரையொன்றில் கூறியதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவையெல்லாம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தான் இலங்கை அரசு பதறிப் போனது.
அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அரசியல் நடத்த முற்பட்ட ஜே.வி.பி, ஐ.தே.க போன்ற கட்சிகளும் அதிர்ச்சியடைந்தன.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கிளர்ந்தெழுந்தார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க.
ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு எந்த அதிகாரம் கிடையாது என்ற அவரது கருத்து நகைப்புக்கிடமானதாகவும் இருந்தது.

அமெரிக்க வதிவிட உரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தான் இந்த விசாரணைக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

இதேவேளை, இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையீடு செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது ஜாதிக ஹெல உறுமய.

இந்தநிலையில், புலிகளுடனான போர் தொடர்பாக எந்த விளக்கம் தேவையென்றாலும் முப்படைகளினதும் தளபதி என்ற வகையில் போருக்கு உத்தரவிட்ட தன்னிடம் கேட்குமாறு, அமெரிக்காவுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் பணித்தார்.

வழக்கமாக இதுபோன்ற உத்தரவுகளை அரசாங்கம் வெளியிடுவதில்லை. ஆனால் இந்த விபரத்தை அரசாங்கமே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை அழைத்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான சாட்சியங்களைப் பெறும் அமெரிக்காவின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு சமுகமளிக்காமல் உடனடியாகக் கொழும்பு திரும்புமாறு அரசாங்கம் தகவல் கொடுத்தது. இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினத்துக்கு முதல்நாளே வாஷிங்டனில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்டார்.

அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைக்கு சமுகமளிக்காமல் நாடு திரும்பியதால் அவரது வதிவிட உரிமை ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கு முகம் கொடுத்திருந்தால் அவர் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கலாம்.

அவர் விசாரணையில் எந்தத் தகவலையும் வழங்காமல் போயிருந்தாலும் கூட சிலவேளைகளில் அரசியல் சூழ்நிலைகளால் காட்டிக் கொடுத்தவராக அடையாளப்படுத்தப்படும் அபாயம் அவருக்கு இருந்தது.

இப்போதைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையில் இருந்தாலும் சரி அமெரிக்காவில் இருந்தாலும் சரி நெருக்கடிகளும் நிம்மதியற்ற நிலையும் தொடரத் தான் போகின்றது.

நாடு திரும்பிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வைத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது வசதிக்கேற்ப அரசியல் நடத்தத் தொடங்கி விட்டன.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்த முனைந்தது அரசின் சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என்று ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெவித்திருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கலாம் என்பது அவரது ஊகம்.

அதேவேளை, அமெரிக்காவின் விசாரணைக்கு சமுகமளிக்காமல் நாடு திரும்பியதன் மூலம் நாட்டின் கௌரவத்தை அவர் பாதுகாத்து விட்டதாகவும் அவரைப் போலவே பசில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அமெரிக்க வதிவிட உரிமையை நிராகரிக்க வேண்டும் என்று கோயிருக்கிறது ஜே.வி.பி.

இப்படிப் பல கோணங்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகா விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிகழ்வுகள் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் இறங்க விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அவரை அரசியலுக்குள் இழுத்து வரும் வகையிலானதாகவே அமைந்திருக்கின்றன.

சுபத்ரா

Reader Feedback

One Response to “பொன்சேகா ஏன் அமெரிக்காவின் விசாரணையை புறம்தள்ளினார்?”

  1. csjeeva says:

    Srilanka is war crime against Tamils

Leave a Reply