‘பொங்குதமிழென்பது தொன்மொழி தமிழின் எழுச்சி…
ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சி… தமிழீழப் போராட்டத்தின் எழுச்சி… ஒருவகையில் சொன்னால் உலகத் தமிழினத்தின் எழுச்சி… நீங்கள் எழுந்து நின்று உரத்துக் குரல்கொடுத்து ஒன்றுபட்டு குரல்கொடுக்கின்ற போது நிச்சயமாக இந்த உலகம் உங்கள் குரலுக்கு செவிசாய்க்கும்…’
அன்று தாயகத்தில் – பிடுங்கப்பட்ட தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகளுக்காக, தமிழீழ தனியரசுக்காக எத்தனையோ சக்திகளை – எரிமலைகளை எதிர்த்து நின்று, கொண்ட கொள்கையில் உறுதியாக கடைசி மூச்சுவரை சுதந்திர தமிழீழத்துக்காக அந்த மக்களும் போராளிகளும் களமாடி மடிந்தார்கள். அவர்களின் அளப்பரிய தியாகத்தாலும் உயிர்க்கொடையாலும் அர்ப்பணிப்பாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சர்வதேசமட்டத்தில் பேசப்படுகிறது.
இன்று புலம்பெயர் தளத்தில் எமது போராட்டம் விரிவடைந்து செல்கிறது. இது உலகத் தமிழினம் எழுச்சி கொள்ளவேண்டிய காலகட்டம். மக்கள் எழுச்சிகொள்ளும் புரட்சியூடாக எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு போராட்டக் களத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பயங்கரவாதம் என்ற பெயரால் உலக வல்லரசு சக்திகளின் துணைகொண்டு, சுதந்திரத்துக்கான எமது ஆயுதப்போராட்டம் நசுக்கப்பட்ட நிலையில், சர்வதேசம் இன்று தமிழ் மக்களின் அசைவுகளை வேடிக்கை பார்க்கிறது. தேசியப் போராட்ட அமைப்பை நசுக்கிவிட்டால் இனங்களுக்கு இடையே தீர்வைக் காணமுடியுமா என்று பரீட்சித்துப் பார்க்கிறது. தமது நலன்களுக்காக தமிழர்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. மாறாக எமது சுதந்திரத்திற்கான மூன்று தசாப்த கால – அகிம்சையில் தோன்றி ஆயுதவழியில் தீவிரம்பெற்ற – விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டமைக்கும் இரு நூறாயிரம் வரையிலான அப்பாவி உயிர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்குமான நீதியை நிலைநாட்ட சர்வதேசம் பின்னடித்து இழுத்தடித்துவருகிறது.
எமது சுதந்திரத்தை போராடிப் பெறும்வழி எமது மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, நாம் ஒன்றுபட்ட உலகத் தமிழினமாக எழிச்சிபெற்று குரலெழுப்புவதன் மூலமாகவே எமது இழந்த உரிமைகளைப் பெறமுடியும்; எமது தேசம் இறைமைகொண்ட தனித்துவமான தேசம் என்பதும் அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட முடியும்.
தேசியத் தலைவர் கூறியது போல, ‘ஒரு பலம்வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக் குரல் எழுப்பவேண்டும்.’
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பதுபோல், நாம் ஒரு கொடியில் வளர்ந்த விருட்சமாக, ஒரு தொன்மையான தேசிய இனமாக, ஒன்றுபட்ட மக்களின் சக்தியாக, எங்கள் தேசியத் தலைவனின் போராட்டமாக எமது இனத்தின் விடிவுக்காக நாம் ஒன்றுதிரள்வோம்!
எதிர்வரும் 2012 செப்ரெம்பர் 22ஆம் நாள் ஐ.நா. வை நோக்கி அணிதிரள்வோம்! ஜெனீவா – ஐ.நா. வளாகத்தில் ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில் அன்றைய நாள் சனிக்கிழமை 14:00 – 18:00 மணிவரை பொங்குதமிழ் மக்கள் சமுத்திரமாக ஒன்றுகூடி உரிமைக் குரலெழுப்ப டென்மார்க் உட்பட அனைத்து பிரித்தானிய, ஐரோப்பிய தமிழ் மக்களையும் ஒன்றுதிரண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க முன்வருமாறு அன்புடனும் உரிமையுடனும் டென்மார்க் தமிழர் பேரவை சார்பாக அழைக்கிறோம். போக்குவரத்து வசதிகள் யாவும் அந்தந்த நாடுகளில் ஒழுங்குசெய்யப் பட்டுள்ளன. உரிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளவும்.
‘பொங்கு தமிழர்க்கு இன்னல் இழைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!’ – பாரதிதாசன்.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்!’ – தியாகி திலீபன்.
மக்கள் புரிட்சி என்பது, வேற்றுமைகள் கழையப்பட்ட அனைத்துலக தமிழ்மக்களும் உரிமைக்காக உணர்வோடு ஒன்றுதிரண்டு ஓரணியாக ஆர்ப்பரிக்கின்ற பெருநாள்! அவ்வாறான ஒரு மக்கள் புரட்சி வெடிக்கும் பட்சத்தில் நிச்சயம் சுதந்திர தமிழீழம் மலரும்.
வாருங்கள் தமிழர்களே ஒன்றிணைந்து உரிமைக்காக குரல்கொடுப்போம்!! தமிழீழம் மீட்போம்!!
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
- டென்மார்க் தமிழர் பேரவை.







Comments
Powered by Facebook Comments