Wednesday June 19th 2013

Archives

கலைஞரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு வெற்றியாகிய டெசோ!- அனலை நிதிஸ் ச. குமாரன்

பல இன்னல்கள் தன்னைச் சுற்றி இருந்தபோதிலும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக டெசோ மாநாடு நலமே நிறைவேறியுள்ளதாக அறிவித்துள்ளார் கலைஞர்.

எந்தவொரு பொது அமைப்பினாலும் இப்படியான ஒரு செயலைச் செய்ய முடியாது என்று கூறுமளவு மார் தட்டும் தி.மு.கவினருக்கு நிச்சயம் இது ஒரு பெரும் வெற்றியே. தமிழக அரசின் ஆதரவின்றி தமிழகத் தலைநகரில் குறிப்பாக பல சட்டப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தி.மு.கவினர் வெற்றிகொண்டுள்ளமை தி.மு.கவுக்கு நிச்சயம் வெற்றியே.

இந்தியாவின் முதன்மையான சில பணக்காரர்களில் தி.மு.கவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இருக்கிறார்கள். தம்மை வாழவைத்து கோடீஸ்வரர்களாக்கிய தி.மு.கவின் தலைமையை எப்படி இவர்களினால் உதறித் தள்ள முடியும் என்பது வியப்பான கேள்வியே. தனது வருங்கால அரசியல் எதிர்காலத்துக்கு இப்படியானதொரு நிகழ்ச்சி தி.மு.கவுக்கு தேவைப்பட்ட ஒன்றே.

மாநாட்டில் பங்குபற்றியவர்கள் மற்றும் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றும் இன்று நேற்று வெளிவந்தவை இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் பலரில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்பதும் பின்னர் ஈழம் என்கிற சொல்லையே தவிர்த்துப் பேசுவதும் தமிழகத் தலைவர்களிடம் நெடுங்காலமாக இருந்துவரும் நிலைப்பாடே.

இந்திய அரசின் பெரும் பங்களிப்பு

இந்திய அரசு விடுதலைப்புலிகளை எப்படியேனும் தோற்கடித்து ஈழக் கனவைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்கிற மனப்பாங்குடன் செயற்பட்டதைக் கலைஞர் நன்கே அறிந்திருந்தார்.

போர்க் காலத்தில் சிங்களத்துக்குப் பங்காளியாக இருந்த இந்திய அரசு, தி.மு.கவின் ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தனது தோழமைக் கட்சியான தி.மு.கவை எப்படியேனும் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றிட செய்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்குடன் பெரும் பங்களிப்புச் செய்து வருகிறது.

கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது தமிழ்ப் பழமொழி. கண்ணுள்ள போது சூரிய நமஸ்காரம் செய்யாமல் விட்டுவிட்டு, கண் தெரியாமல் போன பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதென்ற பொருளை இப் பழமொழி வெளிப்படுத்தி நின்றாலும், அதற்குள் இருக்கக் கூடிய ஆழமான உட்கருத்தை எவரும் புரிந்து கொண்டு செயற்படுவதாக இல்லை.

கலைஞர் நிச்சயம் இப்பழமொழியை நன்கே அறிந்து வைத்திருந்த போதிலும் தமிழக மக்களை நன்றாக ஏமாற்றலாம் என்பது அவருக்குத் தெரியும். இது அவருக்குக் கைவந்த கலை.

மத்தியிலும் மாநிலத்திலும் கலைஞர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தமிழீழ விடுதலைப போராட்டத்தை அடக்குவதும் பின்னர் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத வேளையில் ஆளும் கட்சிக்கு அழுத்தத்தைக் கொடுத்து எப்படியேனும் ஆளும் கட்சியை வம்புக்கு இழுத்து அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுதலும் போன்ற வக்கிரப் போக்குடைய அரசியலை மேற்கொண்டுவரும் தி.மு.கவைப் பற்றி நிச்சயம் மக்கள் அறிந்து செயற்பட வேண்டும்.

இந்திய நடுவண் அரசு தி.மு.க மற்றும் சிங்கள அரசையும் கைக்குள் வைத்துகொண்டுதான் ஈழத் தமிழர்கள் மீதான நாசகார வேலைகளை அரங்கேற்றியது. எல்லாமே முடிந்து விட்டது என்று இருக்கும் போது தொடர்ந்தும் இந்திய நடுவண் அரசு பல்வேறு விதமான காய்நகர்த்தல்களை ஈழத் தமிழர் விடயத்தில் செய்து கொண்டேதான் இருக்கிறது.

நாரதராகவே இந்தியா செயலாற்றுகிறது என்பதை எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் உணர முடியும். பிரச்சினைகளை உருவாக்குவது, பின்னர் தானே முன்னின்று சமரசம் செய்வது போலப் பாசாங்கு காட்டுவது, இதுபோன்ற வேலைகளையே இந்திய நடுவண் அரசு செய்து வருகிறது.

வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மையென்னவெனில்; இந்தியாவின் பங்களிப்பு ஈழத் தமிழருக்கு எதிராக அதிகமாகவே இருக்கிறது.

சோதனைகளை வெற்றிகொள்ளும் கலைஞர்

தான் எடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஏதாவதொரு சோதனை வரும் என்கிற விதத்திலேயே இது நாள் வரை கலைஞர் செயலாற்றியுள்ளார். ஊழலுக்கு முன்மாதியாகத் திகழும் இது போன்ற விடயங்களை அறிந்து செயலாற்றுவது நல்லது.

நாளை என்ன நடக்கப்போகிறது என்பதனை முதலிலேயே வேண்டப்பட்டவர்களுக்குக் கூறிவிட்டு பின்னர் ஏதோ சோதனைகள் தொடர்கிறது என்கிற மாயையை உருவாக்கிவிட்டு பின்னர் தனக்கு வேண்டப்பட்டவர்களின் உதவியுடன் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிவது என்பது கலைஞருக்குக்; கைவந்த கலை.

உண்ணாவிரதப் போர் என்று கூறிவிட்டு பின்னர் அதனைச் சில வாக்குறுதிகளுடன் நிறுத்துவதென்பது முன்னரே திட்டமிடப்பட்ட செயல். இருப்பினும் கலைஞர் ஏதோ தமிழர்களின் நன்மைக்கே இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்று மக்கள் கருதுகிற காரணத்தினாலேயே இன்றும் வீராப்புடன் உலா வருகிறார்கள் தி.மு.கவினர்.

டெசோ என்கிற மாநாடு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஈழப் போராட்டம் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிடப் போவதில்லை என்பதனை தமிழர்களின் எதிரிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை அனைத்துத் தமிழர்களிடமும் உள்ளது. அதனை நோக்கமாகக் கொண்ட இவ் அமைப்பு நல்லதே.

பொதுவான அமைப்பு ஒன்று டெசோ போன்ற அமைப்பில் உள்வாங்கப்பட்டு எதுவித அரசியல் சாயமும் பூசப்படாத நபர்கள் அங்கத்தவர்களாக இருந்து டெசொவின் செயற்பாடுகளைச் செய்தால் நன்றாக இருக்கும். தி.மு.க, அ.தி.மு.க போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிலிருந்து அனைத்து பகிரங்க உதவிகளையும் வழங்கலாம்.

இப்படியான ஒரு நிலை உருவாகுமெனில் நிச்சயம் டெசோவுக்கு நல்ல மவுசு இருக்கும். தற்போது டெசோ என்பது ஒரு அரசியல் கட்சி போன்றதாகிவிட்டது.

தமிழீழமே உலகத் தமிழரின் தாகம் என்றார். பின்னர் “தமிழீழம் என்கிற சொற்பதத்தைப் பாவிக்க அனுமதியோம்” என்றார் கலைஞர். பின்னர் ‘ஈழம் என்கிற சொல் இருந்தால் மத்திய அரசு மாநாடு நடத்த அனுமதியாது” என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் மூத்த அதிகாரியே தனது கைப்பட எழுதிய அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதனை வெளிக்கொண்டு வந்ததும் தி.மு.க தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னரே கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் இந்தியாவின் உள்துறை அமைச்சர்.

சிதம்பரத்துக்குத் தெரியாமலேயே அவருடைய சக அமைச்சில் வேலைபார்க்கும் ஒரு அதிகாரி குறித்த கடிதத்தை எழுதியிருப்பார்.

இதிலிருந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளின் செயற்பாடுகள் என்னவென்பது நன்கே புரிகிறது.

கலைஞர் எப்போதும் தோல்வியடையக் கூடாது என்று கருதுபவர்கள் ஒருபோதும் கலைஞர் தோல்வியடைவதை அனுமதிக்க மாட்டார்கள்.

டெசோ மாநாடும் வெறும் அரசியல் காரணிகளுக்காக பல நாடகங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக அரங்கேறி உள்ளது.

கலைஞருக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளதா அல்லது ஈழத் தமிழர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஏதாவது வழி வகுக்கப்பட்டுள்ளதா என்பதனை அடுத்து வரவிருக்கும் சில கட்டுரைகளில் அலசலாம்.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply