திமுக தலைவர் கருணாநிதியும் அவரது சகாக்களும் உலகத் தமிழர்களை…
…ஏமாற்றும் வகையில் நடத்தவுள்ள டெசோ மாநாட்டில், தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுவையும் அதன் தலைவர் திரு இரா. சம்பந்தனையும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும்.
மேற்படி டெசோ மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என்ற தமது கட்சியின் முடிவை இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு மனோ கணேசன் அறிவித்து சுமார் 24 மணி நேரத்திற்குள் அறிவித்த தமிழத் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால முடிவுகளுக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவினைத் தொடர்ந்து வழங்கவேண்டும்.
இங்கு நாங்கள் கவனிக்க வேண்டிய பகுதி என்னவென்றால் தமிழத் தேசிய கூட்டமைப்பும், இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ள காரணங்கள் கூட ஒத்த தன்மை உடையவையாகவே காணப்படுகின்றன. அதுவும் உண்மையான காரணங்களேயே அவை முன்வைத்துள்ளன.
கருணாநிதி திடீர் என்று முடிவு செய்த மேற்படி மாநாட்டினால் இலங்கைத் தமிழர்களுக்கோ அன்றி உலகத் தமிழர்களுக்கோ எவ்விதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதை தமிழ் நாட்டின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான திரு பழ. நெடுமாறன் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல அரசியல்வாதிகளும் மேற்படி கருத்தினை ஒத்ததாகவே தங்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
கனடாவின் உதயன் பத்திரிகை கூட கடந்த வாரம் எழுதிய தனது ஆசிரியர் தலையங்கத்தில், மேற்படி மாநாட்டை தமிழத் தேசிய கூட்டமைப்பு பகிஸ்கரிக்காவிட்டால், மேற்படி கட்சி கருணாநிதியின் கடந்த கால, குறிப்பாக 2009 ஆண்டு மே மாதம் வரையிலும் நமது மக்களுக்கு செய்த துரோகத்தனத்திற்கு துணைபோனவர்கள் என்றே மக்கள் கருதுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்குள் நடந்தவற்றை நாம் உற்று நோக்கினால், கருணாநிதிக்கு கேடு காலம் நெருங்கிவிட்டது என்றே நாம் நம்பலாம்.
முதலாவதாக, இந்திய உள்துறை அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மேற்படி டெசோ மாநாட்டை நடத்துவதற்கு இன்னமும் தமது அனுமதியை வழங்கவில்லை என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
மேற்படி மாநாட்டை சென்னையில் நடத்துவதானால், தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் என்பதில் உள்ள ஈழம் என்ற சொல்லை அகற்றிவிட வேண்டும் என்ற நிபந்தனையையும் மேற்படி அமைச்சுக்கள் ஊடாக இந்திய அரசு டெசோ மாநாட்டு குழுவிற்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் முக்கியமான செய்தியொன்றை கலைஞர் கருணாநிதிக்கு தெரியப்படுத்துவதே அந்தக் கடிதத்தின் நோக்கம் என்பதை அதைப் படித்தவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேற்படி கடிதத்தை மிகவும் இரகசியமாக மறைத்து வைத்திருந்த கருணாநிதியின் கபடத்தனத்தையும் மீறி எவ்வாறோ அந்தக் கடிதம் கனடாவில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு கிடைக்க அதன் மூலம் மேற்படி விடயம் இணையத் தளங்களின் ஊடாக செய்தியாக வெளிவந்தது.
மேற்படி கடிதம் பற்றியும் இன்று காலை பிபிசி செய்தியாளர் ஒருவர் கலைஞர் கருணாநிதியிடம் வினவியபோது, அவர் அவ்வாறான ஒரு கடிதம் தங்களுக்கு கிட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வழமையாக பொய்யையே பேசிப் பழகிப்போய்விட்ட அவரது நாக்கு தனது வழமையான பணியையே செய்துள்ளது.
இது ஒரு புறமிருக்க, மேற்படி டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த முடியாது என்று ஜெயலலிதாவின் தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது. தனது மறுப்பிற்காக ஜெயலலிதாவின் அரசு, பல நியாயமான காரணங்களை குறிப்பிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து ஏற்கெனவே மாநாட்டில் கலந்துகொள்வதாக சம்மதம் தெரிவித்த பல அறிஞர்களும் அரசியல்வாதிகளும் தற்போது தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள்.
ஆனால் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் தாங்கள் திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தவுள்ளதாக ஏமாற்று அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
மேற்படி சம்பவங்களையும் நகர்வுகளையும் பார்க்கின்ற போது, முன்னர் தன்மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் ஏமாற்றி துரோகத்தனத்தோடு கேடு விளைவித்த கருணாநிதிக்கு கேடு காலம் நெருங்கிவிட்டது என்றே நாம் கருத வேண்டும்
இதற்கு மேலாக நாம் மற்றுமொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கருணாநிதியின் டெசோ மாநாட்டை மகிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கமும் எதிர்க்கின்றது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் எதிர்க்கின்றார்கள். அப்படியானால் எந்த அடிப்படையில் நாம் எதிர்க்கின்றோம் என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட இந்தியாவின் ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் இலங்கைக்குச் சென்று அங்கு மகிந்தவின் செயற்பாடுகளை பாராட்டி விட்டு வந்தார்கள்.
அவரின் ஆடம்பரமான விருந்துபசாரங்களை எல்லாம் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டவர்கள் இந்த கனிமொழியும் கருணாநிதியும் சகாக்களும் தான்.
எனவே அவர்களது “மோதல்” என்பது தற்காலிகமானதே. ஆனால் எமது கவனமான பார்வையென்பது எப்போதுமே எம்மோடு கூட வரவேண்டியதுதான்.
மலையன்பன்- கனடா






Comments
Powered by Facebook Comments