Saturday May 25th 2013

Archives

போர்க்கள இரகசியங்களை நிரந்தரமாகப் பேண முடியுமா? நீண்ட காலம் நிலைக்காது – சுபத்ரா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் பற்றிய எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம். எதையும் மறைக்க விரும்பவில்லை.

இப்படித்தான் கடந்த ஆண்டு இலங்கை இராணுவம் போர் அனுபவப் பகிர்வுக் கருத்தரங்கை நடத்தியபோது அரசாங்கம் கூறியது.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் இதைத்தான் கூறியிருந்தனர்.

இப்போது இரண்டாவது பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்த இராணுவம் தயாராகியுள்ளது.

இந்தநிலையில் போரின் எல்லா இரகசியங்களையும் வெளியிட அரசாங்கம் தயாராக இல்லை என்று ஊடகத்துறை அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.

சார்க் நாடுகளின் ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப்ப பட்டறையில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

போர்முடிந்து விட்டாலும் பல விடயங்களை வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. தகவல் உரிமைச் சட்டத்தைக் கையில் கொண்டு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்.

பல நாடுகளும், அமைப்களும் இந்தச் சட்டத்தைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அரசாங்கம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு கொடுக்கும் மதிப்பு எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே.

போர்க்காலத்தில் அச்சு ஊடகங்கள் மற்றும் அதன் செய்திகளே அரசின் பிரதான குறியாக இருந்தது.

ஆனால் அப்போது அரசின் கவனம் இணையத்தளங்கள் மீது திரும்பியுள்ளது.

எப்படியெல்லாம் ஒழுங்குமுறைகளை வகுத்து இணையத்தளங்களின் செய்திகளை வடிகட்டலாம், அவற்றின் சுதந்திரத்தைக் குறைக்கலாம் என்று அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாவதைக் கட்டுப்படுத்த இணையங்களுக்கு புதிய சட்டதிட்டங்களைக் கொண்டுவரப் போவதாக அரசு மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தகவல் உரிமைச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தால், பல இரகசியங்கள் வெளியே கசிந்து விடும் என்று அரசாங்கம் பயப்படுகிறது.

குறிப்பாக பாதுகாப்புசம்பந்தப்பட்ட பல இரகசியங்களை் வெளிவருவதை அரசாங்கம் விரும்பவில்லை.

போர்க்காலத்தில் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்பதை ஊடகத்துறைச் செயலரின் கருத்தில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

அதுமட்டுமன்றி இந்தத் தகவல்கள் இலங்கையின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதிலிருந்து போர் சம்பந்தப்பட்ட பல இரகசியங்கள் அதுவும் அரசுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய இரகசியங்கள் பல உள்ளன என்பது வெளிப்படையாகியுள்ளது.

இந்தநிலையில் நாம் எதையும் மறைக்க விரும்பவில்லை என்ற அரசின் முன்னைய கருத்து கேள்விக்குள்ளாகியுள்ளது.

அவ்வாறாயின் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

அத்தகைய இரகசியங்கள் போரின் போதான இழப்புகளாக இருக்கலாம். மீறல்களாக இருக்கலாம்.

அவற்றை வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை.

கடந்த வாரம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு உண்மையைக் கூறியிருந்தார்.

தான் 2006ம் ஆண்டில் போரைத் தொடங்கிய போது இராணுவத்திடம் 80 டாங்கிகள் இருந்ததாகவும் போர் முடிந்த போது 30 டாங்கிகளே எஞ்சியிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதாவது மூன்று ஆண்டு காலப் போரின் முடிவில் 50 டாங்கிகளை இராணுவம் இழந்திருந்தது.

இந்தச் செய்தி இப்போது தான் முதன்முதலாக வெளியே வந்துள்ளது.

ஆனால் இவை அழிக்கப்பட்டவை என்று தப்பாகக் கணக்குப் போட முடியாது.

பழுதானவை சேதமானவை அழிக்கப்பட்டவை என்று எல்லாவற்றையும் சோ்த்தது தான் இந்தக் கணக்கு.

நான்காவது கட்ட ஈழப்போருக்கு இராணுவம் 50 டாங்கிக்ளை விலையாகக் கொடுத்தது என்பது முக்கியமான விடயம்.

இது சாதாரணமான விடயமல்ல. இராணுவத்தின் மரபுவழிப் போராயுதங்களில் முக்கியமான டாங்கிகள் இந்தளவுக்கு இழக்கப்பட்டுள்ளமை முக்கியமானதொன்று.

போர் நீண்டிருந்தால் இராணுவம் மரபுவழியில் போராட முடியாமல் முடங்கிப் போயிருக்கும் என்ற உண்மை இதிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாம் கடைசி நேரத்தில் டாங்கிகள் இன்றி பெரும் சிரமத்துடன் சண்டையிட நோ்ந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் போரின் இறுதி நாட்களில் தாம் டாங்கிகள் ஆட்டிலறிகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம் என இந்தியாவுக்கும் உலகிற்கும் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்ததை அவர் மறந்து விட்டார்.

அவ்வாறாயின் போரின் இறுதி நாட்களில் டாங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் பயன்படுத்தப்பட்டன என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இப்படிப் பல இரகசியங்கள் வெளியே வராதபடி உள்ளன. பல கேள்விகளுக்கு விடைகூறக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை.

அதனால் தான் ஊடகங்ளின் வாயைப்பொத்த முனைகிறது.

ஆனாலும் போரின் இரகசியங்கள் நீண்டகாலம் நிலைக்காது.

சரத் பொன்சேகாவைப் போல வாய்திறக்க இன்னும் பல இராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுபத்ரா

Comments

Powered by Facebook Comments

Leave a Reply