Wednesday June 19th 2013

Archives

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! – கிருஷ்ணாவின் உப்புச் சப்பில்லாத அறிக்கை!

ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா…

…சமர்ப்பித்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அது குறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜ்யசபாவில் வாசித்தார்.

இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசபாவை உலுக்கியது.

இன்று காலை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையைப் வாசித்தார்.

அவரது அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகளை நீளமாக பட்டியலிட்டுப் பேசிய கிருஷ்ணா, தனது அறிக்கையின் இறுதியில், நாம் எந்த முடிவாக இருந்தாலும் அது இலங்கையுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார்.

தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.

கிருஷ்ணாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்…

இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.

ஐ.நா. மனித உரிமை பெரவை மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது என்றார் கிருஷ்ணா.

இது போக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் கிருஷ்ணா வாசித்தார்.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, ஆதரிக்குமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply