Friday December 6th 2019

Archives

ஈழ மக்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கார்த்திகை மாதம்

m_27எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உதயன் ஆசிரியர் தலையங்கத்தில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வெற்றிகளின் சின்னமாய் விளங்கிய அந்த வன்னி மண் சின்னா பின்னமாய் ஆகிவிட்ட நிலையில், விடுதலை வேட்கையின் வித்துக்கள் முளைத்த அந்த மண் இன்று எதிரிகளின் காலடிக்குள் வீழ்ந்து இடர்ப்படுகின்ற வேளையில் மானமுள்ள நமது மக்கள் உள்ளம் வெதும்பி நிற்கின்றனர்.

ஆனால் எதிரிகளோ கொக்கரிக்கின்றனர். கொலை வெறி கொண்டவர்கள் இன்னும் அடங்கியதாகவும் தெரியவில்லை. குருதியின் வாடை இன்னும் அந்த மண்ணில் வீசுகின்றது. சீருடைக்காரச் சிங்களப் படைகள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது.

நவம்பர் மாதமென்பது ஒரு மகத்தான மாதம் என்பதை நாம் இந்தப் பக்கங்களில் வருடக்கணக்காக எழுதிக் கொண்டே வந்தோம். இன்று மட்டும் அதை எப்படி மறுப்பது. அல்லது மறப்பது?. நமது ஈழத்தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.

அந்த மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றவர்களாய் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும். அதை சிங்கள தேசத்திடமிருந்து வாய்களால் கேட்டு வாங்கிவிட முடியாது.

அதைப் போராடித்தான் பெறவேண்டும் என்ற நம்பிக்கைகளோடு போராடப் புறப்பட்ட அந்த பிரபாகரன் என்னும் வீரத்தமிழத் தலைவன் பிறந்த மாதம் இந்த மகத்தான நவம்பர்தான்.

அதே மாதத்தில் தான் இந்த மாவீரர் பற்றிய நினைவெழுச்சி நிகழ்வுகளும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தன. அந்த வீரத் தலைவனையும் மாவீரர்களையும் நாம் ஏன் மறந்து விட வேண்டும்.

மற்றவர்களைப் போல அவர்களின் பெருமைகளையும் தியாகங்களையும் மறந்து விட்டு எங்களால் எப்படி நமது தினசரி கடமைகளைச் செய்ய முடியும். என்ற கேள்விகளை உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் மனச்சாட்சியிடம் ஒரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்.

வெற்றிகள் பலவற்றை முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் அடைந்த போது சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர்கள். அந்த வீரர்களுக்காக நிதியை வாரி வாரி வழங்கியவர்கள் ஏன் தோல்வி ஏற்பட்ட போது மட்டும் துவண்டு விட வேண்டும்.? கருத்துக்களைச் சொல்ல அஞ்ச வேண்டும்? என்ற வினாக்களைத் தான் நாம் இங்கே முன்வைக்க விரும்புகின்றோம்.

நமது மாவீரர்களின் தியாகங்கள் நாம் எப்போதும் மறக்க முடியாதவை. உலகில் தோற்றுவிக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் பலவும் பல நோக்கங்கள் கொண்டவைகளாக இருந்தன. ஆனால் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சர்வதேசத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உலகம் வியப்படையும் வண்ணம் இருந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆதலினால் தான் சர்வதேசம் என்ற பயங்கரவாதக் கூட்டு உன்னதமான அந்த விடுதலை இயக்கத்தை பூண்டோடு அழிக்க தமது கைகளைக் கோர்த்துக் கொண்டது. தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை தற்காலிமாக தவிர்த்து விட்டு அவர்கள் விடுதலைப் புலிகளை அழிக்கத் துணிந்தனர்.

எவ்வாறான தோல்விகளும் பின்னடைவுகளும் நமது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் அந்த மாவீரர்களின் தியாகங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல. அந்த உன்னத உயிர்த்தியாகங்களை நாம் நம்மால் முடிந்த வகையில் மரியாதை செய்து வணங்க வேண்டும்.

வாய்களால் எதுவும் பேச முடியாத சூழ்நிலை இருக்குமானால் மனதிற்குள் நினையுங்கள். எழுத்தில் வடித்து பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டால் மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அந்த தியாகத்தின் பெருமைகளை.

இந்த வாசகங்களையே நாம் இந்த மகத்தான மாதத்தில் நமது மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.

Leave a Reply