Sunday September 5th 2010

இலங்கையின் ஊடக ஒடுக்குமுறை தொடர்கிறது! மற்றொரு ஊடகம் மீதும் தாக்குதல்!

ஏ.ஆர்.வி.லோசனை முகாமையாளராகக் கொண்ட வெற்றி எப்.எம் மற்றும் வெற்றி தொலைக்காட்சி என்பவற்றை நடத்திவரும் “வொய்ஸ் ஒப் ஏசியா” நிறுவனத்தின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலினால் அந்த நிறுவனத்தின் செய்திப் பிரிவு பணிமனை முற்றாகச் சேதம் அடைந்துள்ளது.

செய்திப் பிரிவு பணிமனைக்குள் புகுந்த ஆயுததாரிகள் பொருட்கள் தீவைத்துக் கொழுத்தியதுடன் பெற்றோல்குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

வெற்றி, ரியல், சியத்த மற்றும் வெற்றி அலைவரிசைகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறுவனம் கடந்த 5 வருடங்களாக ஊடகப் பணியை ஆற்றி வருவதுடன் வெற்றி தமிழ் செய்திச் சேவைப் பிரிவு கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.

குறித்த ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்குள் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் செய்திப் பிரிவில் காலைநேர செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களை தாக்கியதுடன் செய்தி அறையினை முழுமையாக தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

ஆயுதம் தரித்த 12 நபர்க்ள தமது முகத்தை முழுமையாக மறைத்தபடி, வாயில் காவலரைத் தாக்கிவிட்டு செய்திப் பிரிவுக்குள் நுழைந்து இந்த அட்டகாசத்தினைப் புரிந்துள்ளனர். முன்னதாக இரவர் மாத்திரம் வாயிற் காவலரை தாக்கி செய்திப் பிரிவைக் காட்டுமாறு அச்சுறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த சமிக்ஞையின் பின்னர் வாகனம் ஒன்றில் இருந்து மேலும் பத்துப் பேர் குறித்த நிறுவனத்திற்குள் வந்து நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது வெற்றியின் காலைநேர செய்திகளுக்காக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துணை ஆசிரியர் க.ரஜனிகாந்த் மற்றும் செய்தியாளர் லெனின் ராஜ் ஆகியோர் ஆயுத தாரிகளால் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். இத் தாக்குதலில் காயமடைந்த லெனின் ராஜ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார். நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்தவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தத் தாக்குதலினானல் குறித்த செய்தி அறையில் காணப்பட்ட 30 கணணிகள் முற்றாக எரியுட்டப்பட்டுள்ளதுடன் மூன்று மொழிகளுக்குமான செய்தி தயாரிப்பும் நேற்று தடைப்பட்டிருந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செய்தி அறைக்குள் புகுந்த ஆயுததாரிக்ள அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன் கணிகளையும் பொருட்களையும் எரித்துள்ளனர். அத்துடன் பெற்றோல் குண்டினை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் குறித்த நிறுவத்தின் யன்னல்கள், குளிருட்டி, படப்பிடிப்புக் கருவிகள் போன்ற பெறுமதி மிக்க பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. ஆயுத தாரிகளின் தாக்குதலினால் எரியுட்டப்பட்ட பொருட்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் முலாக எரிந்த வண்ணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாக்குதல் இடம்பெற்ற போது செய்திப் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த வெற்றி எப்.எம். செய்தியாளர் லெனின் ராஜ் தகவல் தருகையில், அதிகாலை 1.20 மணியளவில் இனந் தெரியாத நபர்கள் எமது நிறுவனத்துக்குள் முகங்களை முழுமையாக மறைத்தபடி உட்புகுந்தனர். திடீரென பாதுகாவலர் அழுகின்ற சத்தம் கேட்டது. அப்போது நாம் வெளியில் வந்து பார்த்தோம். தம்மை முழுமையாக மறைத்தபடி ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் தனது கையில் ஆயுதத்தை வைத்திருந்தார். செய்தி அறை எங்கே இருக்கின்றது என்று அவர் கேட்டார். நான் பதில் சொல்வதற்கு முன்னரே அவர் என் மீது தாக்குதல் நடத்தினார்.

அதன் பின்னர் அவரது சமிக்ஞை மூலம் ஏனையோரும் உள்ளே வந்தனர். 10 முதல் 12 பேர் வரையில் செய்தி அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அனைத்துக் கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்து நொருக்கினர். ஒவ்வொருவரும் கணினிகளையும் உடைத்தனவர். வந்தவர்களில் ஒருவர் பெற்றோல் வைத்திருந்தார். அவர் பெற்றோலை ஊற்றி தீயினைப் பற்றவைத்தார். ஏனையவர்கள் கைகளில் இருந்த எதனையோ வீசினார்கள். அதனால் பெரும் தீ பரவியது. சம்பவம் இடம்பெற்ற போது நானும் ரஜனிகாந் என்பவரும் தான் அங்கே இருந்தோம். வந்தவர்கள் எங்களது தலைக்கு மேலே துப்பாக்கியை வைத்து இருந்த இடத்தை விட்டு எழும்பினால் சுடுவோம் என எச்சரித்தனர். இதனால் நாம் அந்த இடத்திலேயே அமர்ந்தோம்.

அதே நேரம் பலர் எம்மை துப்பாக்கியாலும் தாக்கினர். எம்மைத் தாக்கியதுடன் கணினிகளையும் உடைத்தனர். மாறி மாறி இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 10 நிமிடங்கள் வரை இந்தத் தாக்குதல் தொடர்ந்தது. வெடிக்கப் போகின்றது எல்லோரும் வெளியே வாருங்கள் என ஆயுத தாரிகளுள் ஒருவர் சிங்களத்தில் கூறினார். அந்த வேளை கையிலிருந்த எதையோ எறிந்துவிட்டு அவர்கள் போனார்கள் என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து கடமையிலிருந்த வெற்றி எப்.எம்.துணை ஆசிரியர் க.ரஜனிகாந் விபரிக்கையில்,

எம்மைத் தாக்கிவிட்டு அலுவலகத்திலிருந்த சகல உடைமைகளையும் ஆயுததாரிகள் தேசப்படுத்திவிட்டு சென்றனர். அதிகாலை 1.20 மணியளவில் புகுந்த காடையர்கள் செய்தி அறையினுள் புகுந்து என்னையும் லெனினையும் தாக்கிவிட்டு பாதுகாவரையும் தாக்கிவிட்டு உள்ளே நுழைந்தனர்.

செய்திப் பிரிவில் இருந்த சகல உடைமைகளையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு பெற்றோல் குண்டுகளால் தாக்குதல் நடாத்தினார். இதனாலேயே பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Leave a Reply